உள்ளூர் செய்திகள்

தரமற்ற பொருட்களுக்கு இழப்பீடு வழங்கிய தனியார் நிறுவனம்

Published On 2023-01-31 06:31 GMT   |   Update On 2023-01-31 06:31 GMT
  • 7 நாட்களுக்குள் மாற்றித்தர நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
  • வழக்கு தொடுத்த 12 நாட்களில் உத்தரவு

அரியலூர்,

அரியலூர் நகரில் வசிப்பவர் கிரி மனைவி கற்பகவள்ளி(வயது55). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டியபோது வீட்டுக்கு பொருத்துவதற்கு தண்ணீர் குழாய்களையும், அதற்கு தேவைப்படும் இதர பொருள்களையும் ரூ.47,000 செலுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் வாங்கியுள்ளார்.ஆனால், தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்ட 3 மாதத்தில் கசிவு, குழாய் அடைப்பு, பாசி பிடித்தல் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து குழாய்களை விற்பனை செய்தவரிடம் கற்பகவள்ளி புகார் தெரிவித்துள்ளார். இதனை உற்பத்தியாளருக்கு தெரிவித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.ஆனால் பல மாதங்களாகியும் உற்பத்தியாளரும், விற்பனையாளரும் பிரச்சினையை சரி செய்யாமல் அலட்சியம் காட்டி வந்துள்ளனர்.இதையடுத்து கடந்த மாதம் 14 ஆம் தேதி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்கு தொடுத்துள்ளார். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு உற்பத்தியாளருக்கும், விற்பனையாளருக்கும் ஆணையத்திலிருந்து அறிவிப்பு அனுப்பி கடந்த 12 -ந் தேதி முதல் விசாரணை தொடங்கியது.இதில், கடந்த 24 -ந் தேதி சமரச அறிக்கை மாவட்ட ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், அன்றைய தினமே குழாய்களை உற்பத்தி செய்த நிறுவனத்தினர் வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.50,000 இழப்பீட்டுத் தொகையாக (வரைவோலையாக) வழங்கினர்.இதுதொடர்பாக மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு, சமரச அறிக்கையின்படி குழாய்களை உற்பத்தி செய்த நிறுவனம், விற்பனை செய்த குழாய்களையும் இதர பொருள்களையும் எடுத்துக்கொண்டு வழக்கு தொடுத்தவருக்கு ஒரு வார காலத்துக்குள் தரமான குழாய்களையும் இதர பொருள்களையும் வழங்கவேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News