உள்ளூர் செய்திகள்

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் பேசினார்.

திருமண்டகுடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து தொடர் போராட்டம்

Published On 2022-12-24 09:51 GMT   |   Update On 2022-12-24 09:51 GMT
  • விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக முறைப்படி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
  • விவசாயிகளுடைய பெயரில் வழங்கப்பட்ட கடன் தொகைக்கு வட்டி மானியம் வழங்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகில் உள்ள திருமண்டக்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் 24-வது நாள் தொடர் போராட்டம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க.காசிநாதன் தலைமையிலும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக.முருகேசன் முன்னிலையிலும் நடைபெற்றது.

விவசாயிகள் தினத்தை முன்னிட்டு கரும்பு விவசாயிகள் தேசிய கொடியை கையில் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி யில் கூறியிருப்பதாவது:-

கரும்பு விவசாயிகள் போராட்டம் 24 நாட்களைக் கடந்தும் நடந்து வரும் வேளையில் மத்திய,மாநில அரசுகள் கவலை கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக முறைப்படி போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இந்த ஆலையை நிர்வகித்து வந்த திருவாரூரான் சர்க்கரை ஆலை உரிமையாளர் கால்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஆலையை விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையினை பட்டுவாடா செய்யாமல் விற்று இருக்கிறார்.

இந்த ஆலையை புதிதாக வாங்கிய நிறுவனமும் இவர்களுக்கு பட்டுவாடா செய்ய வேண்டிய சுமார் 100 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டு வருகிற இத்தொகையை இதுவரை தராமல் ஏமாற்றி வருவது வருத்தம் அளிக்கிறது.

கரும்பு விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் மோசடியாக கடன் பெற்று இருப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக ஆலை முதலாளிகள், வங்கி நிர்வாகத்தினர் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும். மேலும் உடனடியாக உரிய விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும்.

விவசாயிகளுடைய பெயரில் வழங்கப்பட்ட கடன் தொகைக்கு வட்டி மானியம் வழங்க வேண்டும். ஆலை நிர்வாகத்திடம் இருந்து பெறவேண்டிய தொகையைப் பெற்று கரும்பு விவசாயிகளின் பிரச்சனைக்கு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாதவன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி திருவாரூர் மாவட்ட செயலாளர் சித்தாடி ராஜா, உழவர் உரிமை இயக்க தஞ்சை மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி பாபநாசம் ஒன்றிய செயலாளர் தமிழ் வேந்தன், பாபநாசம் ஒன்றிய தலைவர் தமிழ் மாறன், திருவாரூர் மாவட்ட பொருளாளர் ஹென்றிதாஸ், குடவாசல் ஒன்றிய செயலாளர் சாலமன், குடந்தை ஒன்றிய முன்னணி பொறுப்பாளர் ஸ்ரீராம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News