முதுமலை புலிகள் காப்பகத்தில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த யானை
- ஆனைகட்டி பகுதியில் காட்டு யானைகள், பறவைகள், மான்கள், புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
- யானையின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் யானை இறந்து நீண்ட நாட்கள் இருக்கும் என தெரிகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆனைகட்டி பகுதியில் காட்டு யானைகள், பறவைகள், மான்கள், புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகம், சீகூா் சரகத்தில் உள்ள ஆனைகட்டி பகுதியில் வனத் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அழுகிய நிலையில் யானையின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நேற்று வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் உடலை பார்வையிட்டனர்.
அப்போது யானையின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் யானை இறந்து நீண்ட நாட்கள் இருக்கும் என தெரிகிறது. தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
ஆனைகட்டி வனப்பகுதியில் யானை அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டோம். அப்போது இறந்து கிடந்த யானை 22 வயது பெண் யானை என்பது தெரியவந்தது. இருப்பினும் யானை இறந்ததற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.
பிரேத பரிசோதனைக்குப் பின்னா் யானையின் உடல் பாகங்களை டி.என்.ஏ. சோதனைக்காக சென்னைக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவுகள் வந்த பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.