உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்த படம்.

தென்திருப்பேரை வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

Published On 2023-09-09 09:11 GMT   |   Update On 2023-09-09 09:11 GMT
  • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க கூட்டணியினர் ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

தென்திருப்பேரை:

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க கூட்டணியினர் ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்திருப்பேரையிலுள்ள வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆழ்வார்திருநகரி வட்டாரத்தலைவர் அகஸ்டின் ஞானதுரை தலைமையில் இம்மானுவேல், சுரேஷ் நியூமேன், ஜெபா பாண்டியன், தேவசகாயம், லாரன்ஸ், தாமஸ், இர்பான் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம்நடந்தது. மாவட்ட தலைவர் ஜீவா ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினர்.

எண்ணும் எழுத்தும் திட்டத்தை ஆய்வு மேற்கொள்ள ஆசிரியர் பயிற்சி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களைக் கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பிடும் உத்தரவை உடனடியாகத் திரும்பபெற வேண்டும், காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அனைத்து நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் ஊதியமில்லாமல் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி ஒப்புதல் வழங்கி, ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். முடிவில் பொருளாளர் ஜெயராஜ் நன்றி கூறினார். ஆழ்வார்திருநகரி வட்டாரச் செயலாளர் மகேஷ் துரைசிங் உட்பட 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News