உள்ளூர் செய்திகள் (District)

செலக்கரசல் ஊராட்சி மன்றத்தில் தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2023-05-09 09:21 GMT   |   Update On 2023-05-09 09:21 GMT
  • ஊராட்சி மன்ற தலைவர் தங்களை மதிப்பதில்லை எனவும் ஊராட்சி மன்றத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
  • அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தியதால் போராட்டத்தை கைவிட்டனர்.

சூலூர்,

சூலூர் அருகே செலக்கரச்சல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் வந்திருந்தனர்.

ஊராட்சி மன்றத்தில் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். நேற்று காலை திடீரென தி.மு.க.வைச் சேர்ந்த 5 வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர் பஷீர் அகமது தலைமையில் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சு வார்த்தை நீண்ட நேரம் நடைபெற்றதால் அப்பகுதியில் சம்பந்தப்பட்ட தி.மு.க. உறுப்பினர்களின் வார்டுகளில் உள்ள பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பாக திரண்டனர். அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் தங்களது வார்டுகளில் ஊராட்சி மன்றத்தின் சார்பாக பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

அப்பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் திரண்டதால் கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ் தலைமையில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன், சூலூர் போலீசார் மற்றும் சுல்தான்பேட்டை போலீசார் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க சிறப்பு காவல் படையினரும் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர் மரகதவடிவு கருப்புசாமி தங்களை மதிப்பதில்லை எனவும் ஊராட்சி மன்றத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.இது பற்றி ஊராட்சி மன்ற தலைவர் மரகதவடிவு கருப்புசாமி கூறுகையில் ஊராட்சி மன்ற பணிகளுக்கான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் போராட்டத்தில் ஈடுபடும் உறுப்பினர்கள் யாரும் தங்களது அலைபேசியை எடுப்பதில்லை மேலும் எவ்வித கூட்டத்திற்கும் வருவது கிடையாது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்துகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கு பொதுமக்களின் நலன் மீது அக்கறை இல்லை என தெரிவித்தார்.

அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இனி வரும் நாட்களில் மூலம் அனைவருக்கும் தகவல் பரிமாறப்படும். ஊராட்சி பணிகளில் வார்டு உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பேசி சமாதானப்படுத்தினர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News