உள்ளூர் செய்திகள்

பள்ளத்தில் சிக்கிய லாரி.

விருத்தாசலத்தில் தரமற்ற சாலை விரிவாக்க பணிகளால் கால்வாய் பள்ளத்தில் சிக்கிய லாரி

Published On 2023-04-12 07:30 GMT   |   Update On 2023-04-12 09:11 GMT
  • சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொழில் தட சாலை திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன
  • கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்

கடலூர்:

சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொழில் தட சாலை திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு அங்கமாக விருத்தாசலம் நகரப் பகுதிகளிலும் இப்பணிகள் நடைபெறுகின்றன. விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் பணிகள் தொடங்கப்பட்ட நாள் முதலே சாலை பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் மற்றும் அப்பகுதி கவுன்சிலர் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வந்தனர். சாலைப்பணிகள் தொடங்கி ஒரு வருடம் கடந்த நிலையிலும் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்

இந்நிலையில் சாலை விரிவாக்க பணிகளில் ஒரு பகுதியாக சாலையின் இரு புறங்களிலும் கால்வாய் ஆழமாக தோண்டப்பட்டு அதனை கான்கிரீட் பலகை மூலம் மூடும் பணி நடைபெற்று வந்தது.

ஆனால் கால்வாயை மூடும் கான்கிரீட் மெலிதாக இருப்பதாகவும் இதனால் அந்த பகுதியில் இருக்கும் கியாஸ்குடோன், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களுக்கு லோடு வாகனங்கள் செல்லும்போது, விபத்தில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் ஒப்பந்ததாரர் மற்றும் பொது ப்பணித்து றையினரிடம் தெரிவித்து வந்தனர். அதனால் மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மெலிதான கான்கிரீட் பலகை மூலம் கால்வாயை மூடும்பணி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு கான்கிரீட் கற்களை ஏற்றி வந்த லாரி அந்த பகுதியில் சாலையை கடக்கும் போது, பெரும் சப்தத்துடன் திடீரென கான்கிரீட் மூடி உடைந்து லாரி டயர் கால்வாயில் சிக்கிக்கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் லாரியை பள்ளத்திலிருந்து வெளியேற்ற முயற்சி செய்தார். ஆனால் 1 மணி நேரம் போராடியும் லாரியை வெளிய எடுக்க முடியவில்லை. பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் பொதுப்பணி துறையினர் கிரேன் மூலம் லாரியை எடுத்து சாலையில் விட்டனர். இது பற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், நள்ளிரவில் இந்த சம்பவம் ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது .இதுவே காலை நேரத்திலோ அல்லது சிலிண்டர்கள் ஏற்றி ச்செல்லும் லாரி விபத்தில் சிக்கி கொண்டிருந்தால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்கும் என வேதனை தெரிவித்தனர்.

இனியாவது தரமான வகையில் சாலை பணிகள் நடக்குமா என்பதே பொது மக்களின் கேள்வியாக உள்ளது.

Tags:    

Similar News