மருத்துவர்களை தாக்கும் நபர்கள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத படி கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும்- பிரகாசம்
- 16 ஆண்டுகள் ஆகியும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
- மருத்துவர்கள் மீதான தாக்குதல் குறித்து எங்கள் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய துணை தலைவர் மற்றும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாசம் சேலத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மருவத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மருத்துவர் மீது தாக்குதல் சம்பவங்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வர முடியாத அளவிற்கு5 வருட சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. ஆனால் 16 ஆண்டுகள் ஆகியும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் மீது மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது . ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம் குற்றவாளிகள் அதிகார பலம், ஆள் பலம் மிக்கவர்களாக உள்ளதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். நேற்று மருத்துவர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு குற்றம் சாட்டப்பட்டவர் மீது எந்த வழக்கு போடுவது என்று தெரியாத அளவிற்கு காவல் துறையினர் உள்ளனர்.
எந்த மருத்துவரும் தவறு செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவது இல்லை. இனி வரும் காலங்களில் அரசு மருத்துவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இல்லாமல் போய்விடும்.
தற்போது நடைபெற்ற சம்பவத்திற்கு தமிழக முதல்வர் தொலைபேசியில் பேசியது பாராட்டுக்குரியது. இனி வரும் காலங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் 12 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் .15 நாட்களுக்குள் குற்ற நகல் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
மேலும் மருத்துவமனையில் முக்கிய இடங்களுக்கு மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறையும் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் குற்றம் செய்யும் நபர்கள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத அளவிற்கு கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும். மருத்துவர்கள் மீதான தாக்குதல் குறித்து எங்கள் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்படவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது இந்திய மருத்துவ சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் சாது பகத்சிங், செயலாளர் குமார், தலைவர் தேர்வு மோகனசுந்தரம் ,துணைத் தலைவர் ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.