- பாரதி மேற்கோள்காட்டிய புலவர்களிலேயே முதலிடத்தை பெறுபவர் கம்பர்.
- கம்பர் சிலையின் முன்பு தமிழர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி பேசினார்.
குத்தாலம்:
யாமறிந்த புலவர்களிலே கம்பனைப் போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல் பூமி தன்னில் யாங்கெனுமே பிறந்ததில்லை என பாரதி மேற்கோள்காட்டிய புலவர்களிலேயே முதலிடத்தை பெறுபவர் கம்பர்.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள்.
இத்தகைய சிறப்புகள் பல பெற்ற கம்பர் பிறந்தது மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தேரழுந்தூர்.
இவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் விழா தேரழுந்தூர் கம்பர் கழகம் மற்றும் புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில் 93-ஆம் ஆண்டு கம்பர் விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது.
தேரழுந்தூர் கம்பர் கோட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலில் கம்பர் வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து கம்பர் இயற்றிய கம்பராமாயண புத்தகங்களையும், சீர் வரிசைகளையும் தமிழ் அறிஞர்கள் தங்கள் தலைகளில் சுமந்து வீதி உலாவாக கம்பர் கோட்டத்தை அடைந்தனர்.
அங்கு அமைந்துள்ள கம்பர் சிலையின் முன்பு தமிழர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி பேசினார்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தமிழறிஞர்கள் வழக்காடு மன்றம், சொற்பொழிவு, உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு கம்பரின் புகழ்பாடினர்.
இதில், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன், புதுச்சேரி கம்பன் கழக செயலாளர் சிவக்கொழுந்து, உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், புதுக்கோட்டை கம்பன் கழகம் ராமசாமி, ராமச்சந்திரன், ராமேஸ்வரம் கம்பன் கழக தலைவர் முரளிதரன், தேரழுந்தூர் முத்துசானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.