உள்ளூர் செய்திகள் (District)

கனமழை எதிரொலி- சென்னிமலை நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Published On 2024-07-19 05:50 GMT   |   Update On 2024-07-19 05:50 GMT
  • அணையின் உள்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை ஆகாயத்தாமரை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.
  • அணையில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளம் நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரித்து சென்றது.

சென்னிமலை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பரவலாக பெய்து வருகிறது.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருவதை அடுத்து கோவை, திருப்பூர் வழியாக வரும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.17-ம் தேதி காலை நிலவரப்படி ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கம் இல்லை. அப்போது அணைக்கு வினாடிக்கு 59 கன அடி தண்ணீர் மட்டுமே நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 59 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டது. அப்போது அணைக்கு வந்த தண்ணீரில் இருந்த உப்புத்தன்மை (டிடிஎஸ்) 1640 இருந்தது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருவதால் நேற்று முன்தினம் நள்ளிரவு நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி அணையில் 9 அடி தண்ணீர் தேங்கி நின்றது. அணையின் உள்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை ஆகாயத்தாமரை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு 393 கன அடி தண்ணீர் நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 229 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று பகலில் மீண்டும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 676 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 418 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

அணையில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளம் நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரித்து சென்றது. நேற்று மாலை அணையில் 11.6 அடி தண்ணீர் தேங்கி நின்றது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் இன்னும் ஒரிரு நாளில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நொய்யல் ஆற்றை யாரும் கடந்து செல்ல வேண்டாம் என்று பொது பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News