மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்
- மத சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
- விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் அமைப்பினர் பங்கேற்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் அமைப்பினர் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
தமிழகத்தில் வன்முறையை தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகளைக் கண்டித்தும், மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும், தலித், பழங்குடியின மக்கள் மற்றும் மத சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையம் அருகில் காந்திஜி சாலையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சீனிவாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், ராஜகுமார் எம்.எல்.ஏ, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.