உள்ளூர் செய்திகள்

வேலகவுண்டம்பட்டி ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் ஆய்வு செய்த காட்சி.

திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

Published On 2022-11-11 10:29 GMT   |   Update On 2022-11-11 10:29 GMT
  • திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
  • ஆய்வின் போது மழைக்காலத்திற்கு முன்னரே அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், கருவேப்பம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 கீழ் ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் நாராயணம்பாளையம் ஏரி புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநருமான மகேஸ்வரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, ஏரியின் நீர் வரத்து கால்வாயினை சுத்தமாக பராமரிப்பு செய்திடவும், மழைக்காலத்திற்கு முன்னரே அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் ஓ.ராஜபாளையம் ஊராட்சி, சிவசக்தி நகர் முதல் தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 கீழ் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளதை அவர் நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 கீழ் ரூ.12.91 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டும் பணியினை பார்வையிட்டு நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் ராமாபுரம் அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலகவுண்டம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட உணவு மற்றும் சுண்டல்  ஆகியவற்றின் தரத்தை ருசி பார்த்தார். விடுதியில் மாணவர்களுக்கு தேவையான  குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சமையலறை சுகாதாரமான முறையில் உள்ளதா என்றும் ஆய்வு செய்தார். கழிப்பிடங்கள், குளியலறை ஆகியவை சுத்தமாக உள்ளனவா என்றும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (திருச்செங்கோடு) மகாலட்சுமி, டேவிட்‌ அமல்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (மல்லசமுத்திரம்) அருண்குமார், ரமேஷ் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் உடன்‌ இருந்தனர்.

Tags:    

Similar News