உள்ளூர் செய்திகள்
மார்த்தாண்டம் அருகே பேரூராட்சி தலைவி மீது தாக்குதல்
- துணை தலைவர் உட்பட 2 பேர் மீது வழக்கு
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிரகோடு விரிகோடு நெல்லிக்கன்விளையை சேர்ந்தவர் பமலா (வயது 51).இவர் உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவியாக உள்ளார்.
சம்பவத்தன்று பேரூராட்சியில் மன்ற கூட்டம் நடந்து முடிந்த போது மீண்டும் 14-வது வார்டு உறுப்பினரும், பேரூராட்சி துணை தலைவருமான செல்வின் தலைவரிடம் பேச சென்றுள்ளார். அதற்கு தலைவி கூட்டம் முடிந்து விட்டது என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த துணை தலைவர் செல்வின் மற்றும் அவரது தம்பி பிரவீன் ஆகியோர் பேரூராட்சி தலைவி பமலாவை தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இது குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.