உள்ளூர் செய்திகள்

சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் நேற்று காலையில் மோதிரமலை சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

மோதிரமலையில் மறியல் போராட்டம் நடத்திய 190 பேர் மீது வழக்கு

Published On 2022-12-10 08:01 GMT   |   Update On 2022-12-10 08:01 GMT
  • பேச்சிப்பாறை அணை சீரோ பாயின்ட் சந்திப்பிலிருந்து கோதையாறு கீழ் தங்கல் செல்லும் சாலை 15 கி.மீ. தூரம் கொண்டதாகும்.
  • இந்த சாலையை 17 மலை வாழ் காணியின பழங்குடி குடியிருப்பு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை அருகே சீரோ பாயின்ட் சந்திப்பிலிருந்து கோதையாறு கீழ் தங்கல் செல்லும் சாலை 15 கி.மீ. தூரம் கொண்டதாகும். இந்த சாலையை 17 மலை வாழ் காணியின பழங்குடி குடியிருப்பு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் நேற்று காலையில் மோதிரமலை சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பழங்குடி மக்கள், பள்ளி மாணவ-மாணவியர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது அந்த வழி யாக வந்த 5 அரசு பஸ்கள் சிறைபிடிக்கப் பட்டன.

இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பிற்காக வந்த குலசேகரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் மாவட்ட கலெக்டருடன் செல்போன் வழியாக பிரச்சினை குறித்து பேசினார். இதன் பின்னர் இப்பிரச்சனை குறித்து 10 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டு, அதிகாரிகளை சந்தித்து 10 நாள்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் உறுதி அளித்ததை தொடர்ந்து பிற்பகல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக 6 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ரெகுகாணி உட்பட 190 பேர் மீது அரசு பஸ்களை சிறைபிடித்தது, அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியது போன்ற பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News