திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
- சுற்றுலா பயணிகள் திற்பரப்பு வந்து அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
- சிறுவர்கள் நீச்சல் குளத்தில் ஆனந்தமாக நீராடியதோடு, நீச்சல் அடித்தும் மகிழ்ந்தனர்.
கன்னியகுமரி:
குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தொடர் மழை காரணமாக கடந்த சில நாட்களாக தண்ணீர் அதிக அளவில் கொட்டியது. இது அவ்வப்போது வெள்ளப்பெருக்காக மாற, சுற்றுலா பயணிகள் குளிக்க சில நேரங்களில் தடையும் விதிக்கப்பட்டது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் தினமும் அருவிக்கு நீராட வந்து கொண்டே உள்ளனர். தற்போது அருவியில் மிதமான தண்ணீர் கொட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களது வருகையும் அதிகரித்து உள்ளது.
அதிலும் விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளாவில் இருந்தும் பைக், கார், வேன், பஸ் போன்றவற்றில் சுற்றுலா பயணிகள் திற்பரப்பு வந்து அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
சிறுவர்கள் நீச்சல் குளத்தில் ஆனந்தமாக நீராடியதோடு, நீச்சல் அடித்தும் மகிழ்ந்தனர். சிறுவர் பூங்காவையும் சுற்றி பார்த்தனர்.