உள்ளூர் செய்திகள்

பிரம்மோற்சவ திருவிழாவுக்காக கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலுக்கு 3 புதிய வாகனங்கள் வந்தது - திருப்பதியில் இருந்து கொண்டு வரப்பட்டது

Published On 2022-08-28 08:27 GMT   |   Update On 2022-08-28 08:27 GMT
  • மாலை நேரங்களில் கோவிலை சுற்றி வெங்கடாஜலபதி சுவாமி பவனி வருவதற்காக 12 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
  • 5 தலை நாகம் கொண்ட சின்ன சேஷ வாகனம், சிம்மவாகனம் ஆகிய புதிய வாகனங்கள்

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்த கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. அந்த அடிப்படையில் பிரம்மோற்சவ திருவிழாவின் போது 10 நாட்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் கோவிலை சுற்றி வெங்கடாஜலபதி சுவாமி பவனி வருவதற்காக 12 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இதற்காக திருப்பதியில் இருப்பது போன்று பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், முத்துப்பந்தல் வாகனம், கற்பக விருட்ச வாகனம், அனுமான் வாகனம், கஜவாகனம், சூரிய சந்திர பிரப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், மோகினி பல்லக்கு ஆகிய 12 வாகனங்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மேலும் ஒவ்வொரு வாகனங்களும் சராசரியாக குறைந்தபட்சம் ரூ.50ஆயிரம் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட உள்ளது. மொத்தம் ரூ.6லட்சம் செலவில் இந்த வாகனங்களை வடிவமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும் இந்த வாகனங்களை கும்ப கோணத்தில் மர சிற்ப சிற்பிகள் மூலம் வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டுஉள்ளது. இந்த நிலையில் திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 7 தலைநாகம் கொண்ட பெரிய சேஷ வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம் ஆகிய 3 புதிய வாகனங்கள் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜபதி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

இது தவிர 5 தலை நாகம் கொண்ட சின்ன சேஷ வாகனம், சிம்மவாகனம் ஆகிய புதிய வாகனங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இருந்து கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு கொண்டு வரப்பட உள்ளது. மீதி உள்ள வாகனங்கள் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்டு விரைவில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழாவும் அதன் பிறகு நவம்பர் மாதம் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 4 நாட்கள் பவித்ர உற்ச திருவிழாவும் நடத்தப்பட உள்ளது.

Tags:    

Similar News