கலெக்டர் அலுவலகம் முன் குடிபோதையில் போராட்டம் நடத்திய வாலிபர்
- தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது
- சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு அந்த வாலிபர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருபவர்கள் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவல கத்திற்கு மனு கொடுக்க வருபவர்களை போலீசார் பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்து வருகிறார்கள். நேற்று இரவு போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர், தனது காதல் மனைவியை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு அந்த வாலிபர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பும் குடிபோதையில் வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் தகராறில் ஈடுபட்டார். அப்போது போலீசாருக்கும் அந்த வாலிபருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.