புலவர்விளை முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் ஊர்வலம்
- மாலையில் முளைப்பாரி எடுத்துச்செல்கின்றனர்
- விழா நாட்களில் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
நாகர்கோவில் :
புலவர்விளை தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் சித்திரை கொடை விழா மற்றும் சித்ரா பவுர்ணமி விழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
9-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) காலை சக்திஹோமம், லட்சுமி பூஜை போன்றவை நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. நாகராஜா கோவிலில் இருந்து பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர் தலைவர் செல்வராஜன் உள்ளிட்ட நிர்வாக குழுவினர் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக செல்கின்றனர்.
நாளை (2-ந்தேதி) ஒழுகினசேரி ஆற்றில் இருந்து அம்மன் யானை மீது பவனி வருதல் மற்றும் பெண்கள் மாவிளக்கு ஏற்றி அம்பாளுடன் கோவிலை சுற்றி வலம் வருதல் போன்றவை நடக்கிறது.
மறுநாள் (3-ந்தேதி) பூப்படைப்பு பூஜை, மஞ்சள் நீராட்டுதல், தேவி ஸ்ரீ முத்தாரம்மன் தங்க பூந்தொட்டிலில் திருத்தா லாட்டு போன்றவை நடக்கிறது.
5-ந்தேதி சித்ரா பவுர்ணமி பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது. ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்று, அம்பாள் சன்னதியில் பொங்கல் வைக்கின்றனர். இரவில் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா மற்றும் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் செல்வராஜன் மற்றும் நிர்வாக குழுவினர் செய்துள்ளனர். விழா நாட்களில் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.