உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் பெண்ணுக்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கை

Published On 2023-03-23 07:19 GMT   |   Update On 2023-03-23 07:19 GMT
  • 9 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடக்கிறது
  • பொதுமக்கள் சமீபகாலமாக சளித்தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள்

நாகர்கோவில் :

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்திலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் 9 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடக்கிறது. நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமாக பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகமான பொதுமக்கள் சமீபகாலமாக சளித்தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள். சளி தொல்லையால் அவதிப்பட்டு வருபவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று நடந்த மருத்துவ முகாமிலும் சளியால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதில் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை தனிமைப்படுத்தி சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் தற்பொழுது வீட்டில் தனிமையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது. ஆனால் அங்கு யாரும் சிகிச்சை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட எல்லை பகுதிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதம் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பரிசோதித்து கொள்வதுடன் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்

Tags:    

Similar News