விதைகளின் தரத்தினை விவசாயிகள் பாதுகாத்துக்கொள்ளலாம்
- நாகர்கோவில் விதை பரிசோதனை நிலைய அலுவலர் அறிவுரை
- நெல் விதைகளின் ஈரப்பதம் 12 முதல் 13 சதவீதம் வரை உலர வைக்க வேண்டும்
நாகர்கோவில் :
நாகர்கோவில் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்பொழுது நெல் அறுவடை ஆரம்பித்து உள்ளதால் விதை பண்ணை அமைத்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள நல் ரகத்தினை பிற ரகத்துடன் கலக்காத வண்ணம் அறுவடை செய்வது மிகவும் இன்றியமையாததாகும். அதற்கு விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் விதைகளின் தரத்தினை கெடாமல் பாதுகாக்கலாம். பயிர் அறுவடை செய்யும் எந்திரத்தினை நன்கு சுத்தம் செய்து பின்னரே பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே அறுவடை செய்த பிற ரக நெல் மணிகள் ஏதேனும் எந்திரத்தில் இருக்ககூடாது.
முதலில் அறுவடை செய்யபடும் விதைகளை விதைக்கு அல்லாத (தானியம்) உபயோகத்திற்கு பயன்படுத்த வேண்டும். அறுவடை செய்த விதைகளை புதிய கோணிப்பைகளில் பிடித்துகொள்ள வேண்டும். அறுவடை செய்த விதை குவியல்களை நன்கு சுத்தம் செய்த களங்களில் உலர வைக்க வேண்டும். உலர வைக்கும்போது காலை 9 மணிக்கு மேல் 12 மணிக்குள்ளும், பிற்பகல் 3 மணிக்கு மேல் 5 மணிக்குள் மட்டுமே உலர வைக்க வேண்டும். உச்சி வேளை வெயிலை தவிர்ப்பது நல்லது.
விதைகளின் ஈரப்ப தத்தை படிப்படியாக குறைத்து நெல் விதைகளின் ஈரப்பதம் 12 முதல் 13 சதவீதம் வரை உலர வைக்க வேண்டும். சரியாக காய்ச்சல் வந்ததை அறிய ஒரு நெல் மணியை கடித்து பார்க்கும்போது, அது 2 துண்டாக பிளவுபட வேண்டும். நன்கு உலர்ந்த விதைகளை புதிய கோணிப்பைகளில் பிடித்து விதைகளின் ரகம் குறித்து எழுத வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட ரகங்களின் சாகுபடி செய்து இருந்தால் ஒவ்வொரு ரகத்தினையும் தனித்தனியாக வைக்க வேண்டும். ஒரு ரகத்துடன் மற்றொரு ரகம் கலக்காதவாறு சேமித்து வைக்க வேண்டும். இதில் கவனமுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விதைக்கு வியல்கள் தரமானதாகவும் எளிதில் தேர்ச்சி பெறும் விதைகளாகவும் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.