குளச்சலில் இன்று மீனவர்கள் திடீர் போராட்டம்
- கோட்டார் மறை மாவட்ட 2 இணை பங்கு தந்தையர்கள் குளச்சல் காணிக்கை அன்னை ஆலயம் வந்து வழிபாடு செய்கின்றனர்
- பேச்சு வார்த்தையில் வழக்கம் போல் ஆலய வழிபாடு நடத்துவது என சுமூக முடிவு ஏற்பட்டது.
கன்னியாகுமரி :
குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் கோட்டார் மறை மாவட்டத்தால் உருவாக்கப்பட்ட அன்பியங்கள் இல்லை என்ற காரணத்தால் கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி முதல் தினசரி திருப்பலி, நினைவு திருப்பலி, ஒப்புரவு அருட்சாதனம், முதல் திருவிருந்து, மந்திரிப்புகள், தவக்காலத்தில் குருக்களால் நடத்தப்படும் சிலுவைப் பாதை ஆகியவைகள் தடை செய்யப்பட்டது. இதையடுத்து குளச்சல் பங்கு மக்கள் மற்றும் கோட்டார் மறை மாவட்ட கடற்கரை பங்குகளின் கூட்டமைப்பு குழு சார்பில் கடந்த மாதம் 24-ந் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை முன்னிட்டு மீனவர்கள் அன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதனால் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் வழக்கம் போல் ஆலய வழிபாடு நடத்துவது என சுமூக முடிவு ஏற்பட்டது.
தொடர்ந்து கோட்டார் மறை மாவட்ட 2 இணை பங்கு தந்தையர்கள் குளச்சல் காணிக்கை அன்னை ஆலயம் வந்து வழிபாடு செய்துவிட்டு செல்கின்றனர். ஆனால் ஆலய நிர்வாகிகள் வழிபாடு நடத்த வரும் இணை பங்கு தந்தையர்கள் குளச்சல் ஆலயத்தில் தங்கியிருக்க வேண்டும் எனவும், வேறு பங்குத்தந்தையை நியமிக்க வேண்டும் எனவும், தடைப்பட்டுள்ள நினைவு திருப்பலியை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனை கோட்டார் மறைமாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் குளச்சல் ஆலய நிர்வாகிகள் நேற்று மாலை அவசரக்கூட்டம் நடத்தினர். இதில் சபைகள், சங்கங்கள் மற்றும் இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்ட முடிவுப்படி 26-ந் தேதி (இன்று) மாலை 3.30 மணியளவில் வேலை நிறுத்தம் செய்யாமல் குளச்சல் காணிக்கை அன்னை ஆலய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட் டது. இதன்படி குளச்சலில் மீனவர்கள் இன்றும் மீண்டும் போராட்டம் நடத்துகின்றனர்.