போக்குவரத்துக்கு இடையூறாக - தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
- அதிக அளவு ஒலி மாசு ஒலிப்பான்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை
நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில், கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.
சாலை பராமரிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட துறையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
முக்கிய சாலைகளில் மின்விளக்குகள் மற்றும் பழுது பார்க்கப்பட வேண்டிய சாலைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது மற்றும் 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை விட அதிக அளவு ஒலி மாசு ஒலிப்பான்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அபராதம் விதிக்க அவர் அறிவுறுத்தினார்.
கூட்ட நெரிசல் மிகுந்த நகர மற்றும் மாநகர பகுதி களில் வாகனங்கள் நிறுத்தி வைக்க தடை செய்யப்பட்ட பகுதிகளிலும், சாலையில் இடையூறாக நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, பத்மனாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) குணால் யாதவ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.