உள்ளூர் செய்திகள்

மகாராஜபுரம் பகுதியில் குடிநீர் கிணற்றின் அருகே உரக்கிடங்கு அமைப்பதை தடுக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு

Published On 2022-07-26 09:23 GMT   |   Update On 2022-07-26 09:23 GMT
  • 5 தலைமுறைகளாக சுமார் 40 சென்ட் இடத்தை சுடுகாட்டுக்காக பயன்படுத்தி வருகிறார்கள்
  • 132 ஆண்டுகள் பழமையான சுமார் 20 அடி ஆழ குடிநீர் கிணறு உள்ளது

நாகர்கோவில் :

தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் வை.தினகரன் மற்றும் நிர்வாகிகள் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அகஸ்தீஸ்வரம் தாலுகா லீபுரம் வருவாய் கிராமம் மகாராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரிதாசபுரத்தில் சுமார் 60 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய ஊர் சார்பில் 5 தலைமுறைகளாக சுமார் 40 சென்ட் இடத்தை சுடுகாட்டுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சுடுகாடு இடத்தை சுற்றி வேலி அமைக்க ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது.

தற்போது அதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஒருவர் சுடுகாட்டை சுற்றி சுற்றுச்சுவர் கட்டி சுடுகாட்டை இனி பயன்படுத்த கூடாது என தடுத்து வருகிறார். மேலும் எங்கள் ஊரில் 132 ஆண்டுகள் பழமையான சுமார் 20 அடி ஆழ குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை எங்கள் ஊர் தலித் மக்கள் மட்டுமல்லாது சுற்று வட்டாரங்களை சேர்ந்த சுமார் 10 கிராம மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கிணற்றுக்கு மிக அருகில் உரங்கிடங்கு அமைக்க சம்பந்தப்பட்ட நபர் முயற்சி செய்கிறார். எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News