உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் டயர் கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Published On 2023-03-27 06:33 GMT   |   Update On 2023-03-27 06:33 GMT
  • டயர் வாங்கிய 53 நாட்களிலேயே இந்த டயர் வெடித்து சேதமடைந்துள்ளது.
  • ரூ.11,060 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

நாகர்கோவில் :

கன்னியாகுமரி மாவட்டம் கல்படியை சேர்ந்த கண்ணன் என்பவர் நாகர்கோவிலில் உள்ள டயர் கடையில் ரூ.1,060 மதிப்புள்ள இரு சக்கர வாகனத்திற்கான டயர் ஒன்று வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய 53 நாட்களிலேயே இந்த டயர் வெடித்து சேதமடைந்துள்ளது.

தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டி ருக்கும் போது திடீரென டயர் வெடித்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஆகவே புதிய டயர் மாற்றித் தருமாறும், ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு தருமாறும் கடைக்காரரை கேட்டுள்ளார். ஆனால் டயர் கடைக்காரர் மறுத்து விட்டார். உடனே வக்கீல் மூலம் நுகர்வோர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான கண்ணன் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் டயர் கடையின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு டயருக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட ரூ.1,060, நஷ்ட ஈடு ரூ.7,500 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 ஆக மொத்தம் ரூ.11,060 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News