களியக்காவிளை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
- அரசு பஸ்சையும் சிறை பிடித்ததால் பரபரப்பு
- உடனடியாக குடிநீர் வழங்கலாம் என வாக்குறுதி அளித்தனர்.
கன்னியாகுமரி :
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் களியக்காவிளை- மெதுகும்மல் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி களியக்காவிளை சந்தை பகுதியில் அமைந்து உள்ளது. இங்கிருந்து ஆர்.சி. தெரு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஆர்.சி. தெரு பகுதியில் குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து பல முறை களியக்காவிளை பேரூரா ட்சியில் புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் இன்று ஆர்.சி. தெரு சாலையில் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் மற்றும் களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.மேலும் உடனடியாக குடிநீர் வழங்கலாம் என வாக்குறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கை விடப்பட்டது. இந்தப் போரட்டம் காரண மாக அந்தப் பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டம் களியக்கா விளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.