உள்ளூர் செய்திகள்

அளவுக்கு அதிகமாக கனிம வளம் கொண்டு சென்ற வாகனங்களுக்கு ரூ.58 லட்சம் அபராதம் - கலெக்டர் நடவடிக்கை

Published On 2023-07-02 09:53 GMT   |   Update On 2023-07-02 09:53 GMT
  • மதுரை மண்டல பறக்கும் படையினரால் திடீர் ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டது
  • வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.57 லட்சத்து 83 ஆயிரத்து 120 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

நாகர்கோவில் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கனிமங்கள் எடுத்துச் செல்வதை தடுப்பதற்கும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை சோதனை செய்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கடும் நடவடிக்கை மேற்கொண்டார்.

இதற்காக தனி வட்டாட்சியர்கள் தலைமையில் போலீசார், புவியியல் மற்றும் சுரங்கத்துறையினர் கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டது. மேலும் மதுரை மண்டல பறக்கும் படையினரால் திடீர் ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்தி கடத்தல் லாரிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகள் மீது குற்றவியல் மற்றும் அபராத நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி மாவட்டத்தில் கடந்த மாதம் (ஜூன்) உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்ட விரோதமாக கனிமங்கள் எடுத்துச் சென்ற குற்றத்திற்காக 40 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு தொடர்புடைய வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது 17 முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

மேலும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக கனிம பாரம் ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக 119 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.57 லட்சத்து 83 ஆயிரத்து 120 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பவர்கள் மீதும், உரிய அனுமதி சீட்டு இல்லாமலும் மற்றும் குறைபாடுள்ள அனுமதி சீட்டுகளுடன் கனிமங்களை எடுத்துச் செல்வோர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் படி குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் அறிவுறுத்தியதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News