உள்ளூர் செய்திகள்

மதுரையில் மார்ச் 5,6-ந்தேதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Published On 2023-02-21 09:58 GMT   |   Update On 2023-02-21 09:58 GMT
  • மதுரையில் மார்ச் 5,6-ந்தேதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.
  • 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மதுரை

தமிழக அரசு சமீபத்தில் 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பயனடைந்தோர் விவரம், மாநில அளவில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மேற்கண்ட திட்ட பணிகள் தொடர்பாக மண்டல அளவில் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். அவர் கடந்த 1, 2-ந்தேதிகளில் வேலூருக்கு சென்றார். அப்போது அந்த மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கடந்த 15, 16-ம் தேதிகளில் சேலத்துக்குச் சென்றார். அங்கு மண்டல அளவிலான உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 5, 6-ந் தேதிகளில் மதுரை மாவட்டத்தில் 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் கீழ் பயன்பெற்றோர் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக மண்டல அளவில் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

அப்போது மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலப்பணித் திட்டங்கள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். இதில் 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

Similar News