உள்ளூர் செய்திகள்

2 வாரங்களாகியும் குறையாத தக்காளி விலை

Published On 2023-07-20 09:38 GMT   |   Update On 2023-07-20 09:38 GMT
  • 2 வாரங்களாகியும் தக்காளி விலை குறையவில்லை.
  • வெளி மார்க்கெட்டுகளில் இதைவிட விலை அதிகமாக உள்ளது.

மதுரை

இந்தியர்கள் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தி வருவதும், பல்வேறு உணவு பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பொருளாகவும் உள்ள தக்காளியின் விலை கடந்த 2 வாரங்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கிலோ ரூ. 20 முதல் 30 வரை விற்பனை செய்து வந்த தக்காளி தற்போது கிலோ ரூ. 140 வரை விற்பனையாகிறது.

தமிழ கத்தின் தக்காளி தேவை அண்டை மாநிலங்களை நம்பி உள்ளது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் டன் கணக்கில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களாக பருவநிலை மாற்றம், மழைப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் தக்களாளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளிக்கு பற்றாக்குறை நிலவியது.

தேவை அதிகம் காரணமாக அதன் விலையும் நாளுக்குநாள் ராக்கெட் வேகத்தில் ஏறி வந்தது.

தொடக்கத்தில் கிலோ ரூ. 80-க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.130 முதல் 140 வரை விற்பனையாகிறது.

இந்த திடீர் விலையேற்றம் நடுத்தர, ஏழை மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

அன்றாடம் சமையல் பயன்படும் தக்காளியை தவிர்க்க முடியாத காரணத்தில் விலையேற்றத்தையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள். தமிழக அரசும் தக்காளியை ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்தது. ஆனால் விலை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. 2 வாரங்களாகியும் தக்காளி விலை தற்போது வரை குறையவில்லை. இதனால் பொதுமக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் தக்காளியை பதுக்கி வைத்து விற்பனை செய்துவம் சில மாநிலங்களில் நடந்து வருகிறது. 2 வாரத்திற்கு முன்பு சரியாக விளைச்சல் செலவு கூட கிடைக்காத தக்காளி பயிரிட்ட விவசாயிகளை இந்த விலையேற்றம் கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதிகளாவும் மாற்றி உள்ளது.

மதுரையை பொருத்த வரை தக்காளி விலை குறைந்தபாடில்லை. அதற்கு மாறாக நாள்தோறும் விலையேறிக் கொண்டு உள்ளது. தக்காளி மட்டுமின்றி சின்னவெங்காயம், கத்திரிக்காய், பீன்ஸ், மிளகாய் உள்ளிட்ட பெரும்பாலான காய்கறிகளின் விலையும் ரூ. 100-ஐ தாண்டி உள்ளது.

மதுரை உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை விபரம் வருமாறு:-

புடலங்காய்-ரூ.24, பூசணி-ரூ.25, கொத்தவரங்காய்-ரூ.35, குடைமிளகாய்-ரூ.90, முருங்கைகாய்-ரூ.45, கொத்தமல்லி-ரூ.40, சேனைகிழங்கு-ரூ.50, கருணைகிழங்கு-ரூ.95, சீனிகிழங்கு-ரூ.40, மரவள்ளிகிழங்கு-ரூ.30, பெரிய வெங்காய்-ரூ.28, புதினா-ரூ.36, கறிவேப்பிலை-ரூ.30, பாகற்காய்-ரூ.50, மலைப்பூண்டு- ரூ.200, கேரட்-ரூ.50, பச்சை பட்டாணி-ரூ.180, மொச்சை-ரூ.50, பீட்ரூட்-ரூ.42, இஞ்சி-ரூ.160. இதே போல் பலசரக்கு பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

உழவர் சந்தையில் மேற்கண்ட விலைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டுகளில் இதைவிட விலை அதிகமாக உள்ளது.

Tags:    

Similar News