உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் 9 மையங்களில் இன்று நீட் தேர்வு

Published On 2023-05-07 09:51 GMT   |   Update On 2023-05-07 09:51 GMT
  • தமிழ் உள்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது.
  • நீட் தேர்வு நடக்கும் மையங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவை,

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடந்தது. கோவை மாவட்டத்தில் நீட் தேர்வு கோவை பப்ளிக் பள்ளி- சரவணம்பட்டி, புலியகுளம் வித்யா நிகேடன் பப்ளிக் பள்ளி, துடியலூர் விவேகம் பள்ளி, கோவை வட்டமலைபாளையம் கங்கா நர்சிங் கல்லூரி, கோவை பொள்ளாச்சி ரோடு கற்பகம் அகாடமி, பட்டணம் எஸ்எஸ்விஎம் பள்ளி, திருச்சி ரோடு ரத்தினவேல் சுப்பிரமணியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சவுரிபாளையம் கேந்திரிய வித்யாலயா, காளப்பட்டி ரோடு நேரு நகர் பிப் பள்ளி உள்ளிட்ட 9 மையங்களில் நடந்தது. மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வினை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுத வந்த மாணவர்கள் காலை 11.30 மணியில் இருந்தே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப் பட்டனர். 1.30 மணி வரை மட்டுமே அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப் பட்டனர்.

1.30 மணிக்கு பிறகு வந்த மாணவ, மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.தேர்வு அறைக்குள் நுழைவு சீட்டு மற்றும் அடையாள சான்று மட்டுமே எடுத்து செல்ல அனுமதித்தனர்.

தேர்வர்கள் மெட்டல் டிடெக்டர்களின் உதவியுடன் நுழைவு வாயிலில் பரிசோதனை செய்யப்பட்ட பின்பு தேர்வறைக்குள் அனுமதிக்க ப்பட்டனர்.

தேர்வு அறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதிக் கப்படவில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், கம்மல், மூக்குத்தி அணியவும் தடை விதிக்கப்பட்டது. தலைமுடியில் ஜடை பின்னல் போட அனுமதிக்கப்படவில்லை.

மேலும் அனுமதிச் சீட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது. தவறான விடைக்கு நெகட்டிவ் மதிப்பெண் இருப்பதால் தேர்வின்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.கோவையில் நீட் தேர்வு நடக்கும் மையங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News