வாழவயல் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால் போராட்டம்-பொதுமக்கள் அறிவிப்பு
- கண்ணன் கடை ஆகிய பகுதிகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.
- குடிநீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் நிலவுகிறது.
ஊட்டி,
கூடலூர் தாலுகா தேவாலா சுற்று வட்டார பகுதிகளான வாழவயல், செத்தகொல்லி, அரசு தேயிலைத் தோட்டம் எண்.3, முத்தையா செட், வட மூலா, கண்ணன் கடை ஆகிய பகுதிகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. நெல்லியாளம் நகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட இப்பகுதிகளில் சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அடிப்படை வசதிகள் கேட்டு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கோடை காலம் தொடங்கி விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் நிலவுகிறது. இதைத்தொடர்ந்து நெல்லியாளம் நகராட்சி அதிகாரிகளை வாழவயல் பகுதி மக்கள் சந்தித்து மனு அளித்தனர். பின்னர் தங்கள் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என நெல்லியாளம் நகராட்சி அதிகாரிகளிடம் வாழவயல் பகுதி மக்கள் முறையீட்டனர். மனுவை பெற்ற நகராட்சி பொறியாளர் வசந்தன், அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.