உள்ளூர் செய்திகள்

சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்ட ஈடுக்கான காசோலையை நீதிபதிகள் வழங்கிய காட்சி.

சேலம் கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம்

Published On 2023-02-11 09:17 GMT   |   Update On 2023-02-11 09:17 GMT
  • ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தேசிய மக்கள் நீதிமன்றம் கூடியது.
  • சமரச நீதிமன்றம் மூலம் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற கட்டணம் உடனே திருப்பி வழங்கப்படுகிறது. இது தவிர நேரம் மீதமாகிறது.

சேலம்:

சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தேசிய மக்கள் நீதிமன்றம் கூடியது. இதனை தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுமதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது, சமரச நீதிமன்றம் மூலம் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற கட்டணம் உடனே திருப்பி வழங்கப்படுகிறது. இது தவிர நேரம் மீதமாகிறது.

சமரச நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது. சமரச மையம் மூலம் தீர்வு காண்பவர்கள் உறவினர்களிடமும், பொதுமக்களிடமும், விளக்கி இம்மையம் மூலம் தீர்வு காண உதவிட வேண்டும். இதேபோல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கறிஞர்கள் உதவிட வேண்டும். இவ்வாறு நீதிபதி சுமதி பேசினார்.

சேலத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு கார் மோதி தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த படுகாயம் அடைந்தார். சிகிச்சை பின் குணமடைந்த அவர், சமரச தீர்வு மையம் மூலம் வழக்கு தொடர்ந்தார்.

இதனை நீதிபதிகள் விசாரித்து படுகாயம் அடைந்த பார்த்திபனுக்கு ரூ.52 லட்சத்து 78 ஆயிரத்து 642 நஷ்ட ஈடு தொகை வழங்க உத்தரவிட்டனர். பார்த்திபனுக்காக வழக்கறிஞர் ரகுபதி வாதாடினார்.

இதற்கான காசோலையை, இன்று நீதிபதிகள் பார்த்தீபனிடம் வழங்கினர். இதேபோல் ராணி என்பவரின் மகன் விபத்தில் இறந்துவிட்டார். இதனையடுத்து ராணிக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலை இன்று வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஜெகநாதன், தங்கராஜ், ஸ்ரீ ராம ஜெயம், மதிவாணன் மற்றும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News