மேட்டுப்பாளையம், நெய்வேலி கிராமத்தில் பான் மசாலா பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது
- மேட்டுப்பாளையம் கிராமத்தில் நடந்த வாகன சோதனையில் 168 பாக்கெட் பான் மசாலா பொருளை பறிமுதல் செய்தனர்.
- நெய்வேலி கிராமத்தின் கடையில் நடத்திய சோதனையில் 450 பாக்கெட் பான் மசாலா பொருளை பறிமுதல் செய்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் காவல் நிலைய சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் நேற்று மதியம் ரோந்து பணி மேற்கொண்டனர். மேட்டுப்பாளையம் கிராமத்தில் வாட்டர் டேங்க் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை வழிமடக்கி நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்ய கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 168 பாக்கெட் பான் மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம் கிராமம் செல்லப்பா (59), ஜனப்பன்சத்திரம், கிருபா நகரைச் சேர்ந்த சிவா (55) என்பது தெரிய வந்தது.
நெய்வேலி கிராமத்தில் ஒரு கடையில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 450 பான் மசாலா பொருட்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர் நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த அலி (55) என்பவரை கைது செய்தனர். 3 பேரையும் போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.