கல்வீச்சு தாக்குதலில் ரெயில்வே கேட் கீப்பர் காயம்; 2 பேர் கைது
- பணியில் இருந்த கேட் கீப்பர் பிரசாத் காயம் அடைந்தார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 35).
வளரும் தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்த இவரை சிலர் வெட்டி படுகொலை செய்தனர்.
இது தொடர்பாக கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் ராஜ்குமார் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து ராஜ்குமார் உடல் திருவாரூரில் இருந்து பூவனூருக்கு அமரர் ஊர்தியில் எடுத்து வந்தனர்.
அப்போது ஊர்வலத்தில் வந்தவர்களில் சிலர் சாலையோர கடைகள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்த நிலையில் ஊர்வலத்தின் போது நீடாமங்கலத்துக்கும், மன்னார்குடிக்கும் இடையே உள்ள ரெயில்வே கேட் மீதும் சரமாரி கற்கள் வீசப்பட்டன.
இதில் அங்கு பணியில் இருந்த கேட் கீப்பர் பீகாரை சேர்ந்த பவன்குமார் பிரசாத் காயம் அடைந்தார்.
உடனடியாக அவர் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இது குறித்து அவர், தஞ்சை ரெயில்வே இருப்புபாதை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சாந்தி, சிவவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
கல்வீசிய சம்பவம் தொடர்பாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வடகரைவயல் குளத்து மேட்டு தெருவை சேர்ந்த இளவரசன் (34), நீடாமங்கலம் அருகே உள்ள கானூர் மெயின் சாலையில் உள்ள ராஜப்பன்சாவடியை சேர்ந்த பழனி (38) ஆகிய 2 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.