சாலை பராமரிப்பு பணிகள் நிறைவு-திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுமா?
- கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
- சாலை பராமரிப்பு பணியால் மீண்டும் கோவிலுக்கு செல்ல வனத்துறை சார்பில் கடந்த 3 மாதங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.
களக்காடு:
திருக்குறுங்குடி வனத்துறை சோதனை சாவடியில் இருந்து, திருமலைநம்பி கோவில் வரையில் 4 கிலோ மீட்டர் தூரமுள்ள மலைப்பாதை பராமரிப்பு பணிகள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.33 லட்சம் செலவில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். முதல் பாலத்தில் இருந்து, கோவில் வரை வீல் டிராக் அமைக்கும் பணிகள் மந்தமாக நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது சாலை பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. ஆனால் பக்தர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே தற்போது சாலை பராமரிப்பு பணியால் மீண்டும் கோவிலுக்கு செல்ல வனத்துறை சார்பில் கடந்த 3 மாதங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். தற்போது சாலை பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.