உள்ளூர் செய்திகள்

கோவையில் கண்ணாமூச்சி காட்டும் தென்மேற்கு பருவமழை

Published On 2023-06-26 09:18 GMT   |   Update On 2023-06-26 09:18 GMT
  • ஜூன் மாதம் இறுதியாகியும் ஒரு கனமழை கூட பெய்யவில்லை.
  • சிறுவாணி அணை, வறண்டு பாளம் பாளமாக காட்சியளிக்கிறது.

கோவை,

தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலான நான்கு மாதங்கள் பெய்யும். தற்போது ஜூன் மாதம் கடைசி வாரத்துக்கு வந்த நிலையிலும், ஒரு கனமழை கூட கோவை மாவட்டத்தில் பெய்யவில்லை.

அணைகள் வறண்டன

கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை, வறண்டு பாளம் பாளமாக காட்சியளிக்கிறது. அணை நீர்த்தேக்கப் பகுதியில் ஆங்காங்கே குட்டை குட்டையாக தேங்கியுள்ள தண்ணீரை சேகரித்து குடிநீர் வழங்கி வருகின்றனர்.

மற்றொரு குடிநீர் ஆதாரமான பில்லூர் அணையிலும் மொத்த உயரம் 100 அடியில், 81 அடி உயரத்துக்கே தண்ணீர் இருக்கிறது. பாதிக்கும் மேல் சேறு நிரம்பியிருக்கும் இந்த அணையும், மழையை எதிர்பார்த்தே இருக்கிறது.

இந்த பகுதியில் இருக்கும் பாசன அணைகளிலும் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. ஆழியாறு அணையில் 57 அடி (மொத்த நீர்த்தேக்க உயரம் 120 அடி), திருமூர்த்தி அணையில் 23 அடி (மொத்த உயரம் 60 அடி), பரம்பிக்குளத்தில் 15 அடி (மொத்த உயரம் 72 அடி) மட்டுமே தண்ணீர் இருக்கிறது.

ஜூன் மாதத்தில் நேற்று வரை பெய்திருக்க வேண்டிய இயல்பு மழை, 137.2 மி.மீ., ஆகும். ஆனால், கண்ணாமூச்சி காட்டும் பருவக்காற்றால், இதுவரை 58.4 மி.மீ., மட்டுமே மழை பதிவாகியுள்ளது. இது, 57 சதவீதம் பற்றாக்குறை யாகும்.வரும் நாட்களிலும் மழை பெய்ய தவறினால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்பதால் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News