உள்ளூர் செய்திகள்

விமல்ராஜ்

ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த மாணவன் பிளஸ்-1 பொதுத்தேர்வில் தேர்ச்சி

Published On 2022-06-29 08:36 GMT   |   Update On 2022-06-29 08:36 GMT
  • திக்கு வாய் என்பதால் யாருடனும் சகஜமாக பேசமுடியவில்லை அதனால் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.
  • பிளஸ் 1 பொதுத்தேர்வில் விமல்ராஜ் 293 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

திருப்பூர் :

திருப்பூர் 2-வது ரயில்வேகேட் அருகே தண்டவாளத்தில் 17-வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ரயில் அடிப்பட்டு சடலமாக கிடப்பதாக, ரயில்வே போலீஸாருக்கு கடந்த 14-ம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று ரயில்வே போலீஸார், சடலத்தை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர்.

திருப்பூர் பழவஞ்சிப்பாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த கணேசன் மகன் விமல்ராஜ் (17) என்பதும், பிளஸ்1 பொதுத்தேர்வு எழுதிய மாணவர் என்பதும் தெரியவந்தது.

விமல்ராஜூக்கு திக்குவாய் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் தனது நண்பர்களுடன் சகஜமாக பேச முடியவில்லையே என்று பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் திருப்பூர் 2-வது ரயில்வே கேட் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக விமல்ராஜ் வீட்டில் எழுதி வைத்த கடிதத்தில், 'எனக்கு திக்கு வாய் என்பதால், நண்பர்கள் யாருடனும் சகஜமாக பேசமுடியவில்லை, எனது அப்பா, அம்மாவுக்கும்

எந்த வேலையும் செய்து கொடுக்க முடியவில்லை. அதனால் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ள கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் வெளியான பிளஸ் 1 பொதுத்தே–ர்வில் விமல்ராஜ் 293 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, "விமல்ராஜ் தேர்ச்சி பெற்றும், தேர்வு முடிவு வெளியாவதற்குள் அவர் உயிரிழந்தது, சக மாணவர்கள் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. வாழ்க்கையில் படிப்பு ஒன்றே எதிர்காலத்துக்கு கைகொடுக்கும்.

ஆனால் இதனை உணராமல், உடல்ரீதியாக ஏற்பட்ட பிரச்சினையால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்திருப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்றைக்கு பிளஸ் 1பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அந்த வெற்றியை அந்த குடும்பத்தால் மகிழ்ச்சிகரமாக கடக்கமுடியவில்லை" என்றனர். மாணவர் விமல்ராஜ் பெற்ற மதிப்பெண்: தமிழ்- 50, ஆங்கிலம்-54, பொருளியல்-57, வணிகவியல்- 49, கணக்கு பதிவியல்-38 மற்றும் கணினி பயன்பாட்டியல்- 45 ஆகும்.

Tags:    

Similar News