உள்ளூர் செய்திகள்

மசினகுடி அருகே மரவக்கண்டி ஏரி பகுதியில் பயங்கர காட்டுத்தீ

Published On 2023-03-05 09:16 GMT   |   Update On 2023-03-05 09:16 GMT
  • நீலகிரி மாவட்டத்திலும் பகலில் கோடை வெப்பமும், இரவில் அதிக பனிப்பொழிவும் நிலவுகிறது.
  • கார்குடி உள்பட அனைத்து பகுதிகளிலும் வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகளை அமைத்தனர்.

ஊட்டி,

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குளு, குளு காலநிலையை கொண்ட நீலகிரி மாவட்டத்திலும் பகலில் கோடை வெப்பமும், இரவில் அதிக பனிப்பொழிவும் நிலவுகிறது.

கூடலூர், முதுமலை, மசினகுடி, பந்தலூரில் அனல் காற்று வீசுகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள பசும்புற்கள், புதர்கள் காய்ந்து விட்டது. மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்து காணப்படுகிறது. இதனால் காட்டுத்தீ பரவாமல் இருக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு, கார்குடி உள்பட அனைத்து பகுதிகளிலும் வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகளை அமைத்தனர்.

இந்த நிலையில் நேற்று மசினகுடி அருகே மரவகண்டி ஏரி, ஆச்சக்கரை பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவியது.

அப்பகுதியில் மூங்கில்கள் அதிகமாக இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.எங்கு பார்த்தாலும் தீ மற்றும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார், வருவாய், வனத்துறையினர் விரைந்து வந்து அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதனால் கூடலூரில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். நாலாபுறமும் தீ வேகமாக பரவிக்கொண்டே இருந்ததால் தீயணைப்புத் துறையினராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

தொடர்ந்து 10 ஏக்கர் பரப்பளவில் மூங்கில்கள், புதர்கள் எரிந்து சாம்பலானது. மொத்தத்தில் கூடலூர், மசினகுடி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி காட்டு தீயால் எரிந்து நாசமானது.இதேபோல், குன்னூர், கோத்தகிரி பகுதியில், பல இடங்களில் பரவிய காட்டுத்தீயை, தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் அணைத்தனர்.

மலைப்பாதை மற்றும் வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் புகை பிடித்து வீசுவது. இடத்தை ஆக்கிரமிக்க தீ வைப்பது போன்றவை காட்டுத்தீ ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளதால், வருவாய், வனம், உள்ளாட்சி நிர்வாகத்தினர், போலீசார் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News