உள்ளூர் செய்திகள்

வீட்டின் கேட்டில் சுற்றி திரியும் குரங்குகள்.

குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதி

Published On 2022-06-08 10:03 GMT   |   Update On 2022-06-08 10:03 GMT
  • தஞ்சை ஞானம் நகரில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
  • குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுமாறு இப்பகுதி மக்கள் பலமுறை தஞ்சை வனத்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே ஞானம் நகர் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நகரில் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிகிறது. எந்நேரமும் கூட்டம் கூட்டமாக குரங்குகள் அலைந்து கொண்டிருக்கிறது.

இந்த குரங்குகள் வீட்டுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. வீட்டில் உள்ள பொருட்கள், மாடியில் காயப்போடபடும் துணிமணிகள் உள்ளிட்ட பலவற்றை தூக்கி கொண்டு செல்கின்றன.

மேலும் வீட்டுக்குள் வைத்திருக்கும் உணவை தூக்கி கொண்டு ஓடுகின்றன. பொதுமக்கள் எவ்வளவோ விரட்டியும் போகாமல் பயமுறுத்தி பொருட்கள் தூக்குகிறது. கூட்டமாக வருவதால் அதனை விரட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

கடைகளில் பொருட்களை தூக்கி ஓடுகிறது. குரங்குகளை விரட்ட முயலும் நபர்கள் மீது பாய்ந்து அவை கடித்து காயப்படுத்துகிறது. அந்த வகையில் குரங்குகளை விரட்டி காயமடைந்த பொதுமக்கள் எண்ணிக்கை 15-க்கும் மேல் உள்ளதாக கூறுகின்றனர்.

இதனால் வீடுகளை விட்டு வெளியே வர பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். குழந்தைகளை வெளியே விளையாட விட பெற்றோர் அச்சப்படுகின்றனர்.

எந்நேரமும் குரங்குகளுக்கு பயந்து கதவை பூட்டி கொண்டு இருக்கும் நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இரவில் வேலை முடிந்து வீட்டுக்கு வருபவர்களையும் துரத்துகிறது.

இதனால் எந்நேரமும் ஒரு வித பதட்டத்துடனே வாழ்ந்து வருகிறோம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக கூறினர்.

எனவே குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுமாறு இப்பகுதி மக்கள் பலமுறை தஞ்சை வனத்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்

ஆனால் இதுவரை வனத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

எனவே அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் இருக்கும் முன்பாக உடனடியாக குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் இதனை செய்ய வேண்டும் என்பதே ஞானம் நகர் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News