உள்ளூர் செய்திகள் (District)

தொட்டபெட்டா சிகரத்திற்கு இயக்கப்படும் பஸ் குறித்து முறையான அறிவிப்பு இல்லை

Published On 2023-04-06 09:04 GMT   |   Update On 2023-04-06 09:04 GMT
  • தொட்டபெட்டா சதுக்கத்தில் இருந்து மலைசிகரம் வரை வனத்துறை சார்பில் வாகனம் இயக்கப்பட்டு வந்தது.
  • அறிவிப்பு இல்லாததால் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஜீப், காரில் பயணித்து வருகிறோம்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.

ஊட்டிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே தொட்டபெட்டா மலைசிகரத்திற்கு செல்வது வழக்கம். பலர் சொந்த வாகனங்களில் வருவார்கள்.

சொந்த வாகனம் இல்லாதோர், ஊட்டியில் இருந்து பஸ் மூலமாக தொட்டபெட்டாவிற்கு வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக தொட்டபெட்டா சதுக்கத்தில் இருந்து மலைசிகரம் வரை வனத்துறை சார்பில் வாகனம் இயக்கப்பட்டு வந்தது.

இந்த வாகனம் மூலம் தினமும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து மலைசிகரத்தை பார்த்து மகிழ்ந்து சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு இயக்கப்பட்டு வரும் வாகனம் பற்றிய முறையான அறிவிப்பு வெளியிடப்படுவதில்லை என சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல வனத்துறை சார்பில் வாகனம் இயக்கப்பட்டு வந்தது. இதனால் ஊட்டிக்கு வரும் நாங்கள் அங்கிருந்து பஸ்சில் தொட்டபெட்டா சதுக்கத்திற்கு வந்து, அங்கிருந்து வனத்துறை இயக்கும் வாகனத்தில் பயணித்து வந்தோம்.

ஆனால் கடந்த சில தினங்களாக வாகனங்கள் வருவது குறித்து முறையான அறிவிப்புகள் வருவதில்லை. இதன் காரணமாக நாங்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம்.

மேலும் வனத்துறை வாகனம் இயக்கப்படுவது குறித்த முறையான அறிவிப்பு இல்லாததால் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஜீப், காரில் இங்கு பயணித்து வருகிறோம். எனவே வனத்துறை முறையான அறிவிப்பு வெளியிட்டு வாகனத்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News