உள்ளூர் செய்திகள் (District)

நகை அடகு கடையில் 13 பவுன் நகைகளை திருடி சென்ற வாலிபர்

Published On 2023-10-05 07:19 GMT   |   Update On 2023-10-05 07:19 GMT
  • எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகார்
  • 14 மனுக்களை பெற்றுக் கொண்டார்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும் திருப்தி அடையாத 9 மனு தாரர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். மேலும் புதிதாக 14 புகார் மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார்.

இதில் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இந்துமதி (வயது 29). இவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு வந்தார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

திம்மாம்பேட்டை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எனது கணவர் கோவிந்தசாமி நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

கடந்த மே மாதம் 28-ந் தேதி நான் கடைக்கு சென்று இருந்தேன். எனது கணவர் கோவிந்தசாமி வேலை சம்பந்தமாக வெளியே செல்ல இருந்ததால் நான் கடையை பார்த்து கொண்டேன்.

அப்போது வாலிபர் ஒருவர் கடைக்கு வந்திருந்தார். என்னிடம் ரூ.500 கொடுத்து சில்லறை கேட்டார். சில்லறை எடுத்து கொடுக்க திரும்பிய போது திடீரென கல்லாவில் வைத்திருந்த 13 பவுன் தங்க நகைகளை அந்த வாலிபர் திருடிக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து திம்மாம் பேட்டை போலீசில் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே நகைகளை திருடிச் சென்ற வாலிபரை கண்டுபிடித்து நகையை மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.

நகைகளின் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது.

மனுவைப் பெற்றுக் கொண்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வாணியம்பாடி டி.எஸ்.பி. விஜயகுமாருக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News