உள்ளூர் செய்திகள் (District)

சாலையை கடந்து செல்லும் கரடி. வனத்துறையினர் ஆய்வு செய்த காட்சி.

மலைபாதையில் கரடி நடமாட்டம்

Published On 2023-10-05 07:16 GMT   |   Update On 2023-10-05 07:16 GMT
  • சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
  • வனத்துறையினர் விடிய விடிய ரோந்து

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கொரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார். இவர் நாட்டறம்பள்ளி பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

இவர் வழக்கும் போல் வேலை முடித்துவிட்டு நேற்று இரவு தனது காரில் நாட்டறம்பள்ளியில் இருந்து நாயனசெருவு கிராமத்தின் வழியாக வீட்டுக்கு சென்றார்.

அப்போது கொரிபள்ளம் அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, கரடி ஒன்று சாலையை கடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் காரை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டார்.

மேலும் கரடி சாலையை கடந்ததை காரில் இருந்தபடியே தனது செல்போனில் பதிவு செய்து அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். கரடி சாலை கடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் கிராம மக்கள் அச்சமடைந்து இரவு நேரங்களில் வீட்டிற்கு விட்டு வெளியே வராமல் உள்ளேயே முடங்கினர்.

மேலும் இரவு நேரத்தில் அந்த சாலை வழியாக பொதுமக்கள் செல்வதையும் முற்றிலுமாக தவிர்த்தனர். மலை கிராம சாலைகளில் வனத்துறையினர் இரவு நேரங்களில் விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி வனசரகர் குமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அங்கு பதிந்துள்ள கால் தடம் மற்றும் உதிர்ந்த முடிகளை வைத்து சாலையில் கடந்து சென்றது கரடி தான் என்பதை உறுதி செய்தனர்.

இது குறித்து வனசரகர் குமார் கூறியதாவது:-

ஆந்திர தமிழக எல்லையில் அடர்ந்த காட்டுப் பகுதியில் மான், மயில், கரடி போன்ற விலங்குகள் அதிக அளவில் உள்ளன.

அவைகளின் வாழ்விடம் காடுகள் தான். சில நேரங்களில் தண்ணீர் தேடி சாலையை கடந்து செல்லும். அதன்படி சாலையை கரடி கடந்த சென்றபோது தான் சதீஷ்குமார் என்பவர் பார்த்துள்ளார். கொரிபள்ளம் அருகே உள்ள கரடி மலை பகுதியில் நடமாடியது கரடி தான் என்பதை உறுதி செய்துள்ளோம்.

மேலும் இந்த வனப்பகுதியில் 6 கரடிகள் நடமாட்டம் உள்ளது. அவைகள் எளிதில் ஊருக்குள் வர வாய்ப்பு இல்லை. இருப்பினும் வனத்துறையினர் குழுவாக பிரிந்து இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

கரடி மலை பகுதியில் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News