உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் பழங்குடியினர் மாணவர்கள் தங்கும் விடுதியில் அதிகாரி ஆய்வு

Published On 2023-04-14 09:12 GMT   |   Update On 2023-04-14 09:12 GMT
  • மாணவர்களுக்கு வழங்கும் உணவுகள் சோதனை
  • வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தர வலியுறுத்தல்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் 14 சிறிய கிராமங்களை கொண்டு தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

இங்கு சுமார் 10,000 மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மலையில் அத்தனாவூர் அடுத்த பழதோட்டம் அருகில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது.

ஏலகிரி மலையில் ஒரே ஒரு அரசு உயர்நிலைப் பள்ளி மட்டுமே இயங்கி வருகிறது. இங்கு ஏலகிரி மலையில் உள்ள மாணவ, மாணவிகளும், ஜவ்வாது மலை, ஆலங்காயம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

மற்ற பகுதிகளில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு அரசு தங்கும் விடுதி அருகிலேயே அமைந்துள்ளது. மாணவிகளுக்கு விடுதிகள் இல்லாமல் இருந்தது. பின்பு 2 வருடங்களுக்கு முன் தாட்கோ நிதியின் மூலம் பள்ளி மாணவிகளுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டது.

இந்நிலையில் நேற்று பழங்குடியினர் நலம் மாவட்ட இணை இயக்குனர் சுரேஷ்குமார் அரசு பழங்குடியினர் விடுதிகளை திடிரென ஆய்வு செய்தார்.

மேலும் இங்குள்ள மாணவர்கள் தங்கும் இடத்தையும், கழிப்பிடங்களையும், குடிநீர், சமையலறைகளையும், மாணவர்களுக்கு வழங்கும் உணவுகளையும் ஆய்வு செய்தார். மேலும் இதுவரை சமையலறையில் எரிவாயு இணைப்பு இல்லாத நிலையில் உடனடியாக இணைப்பை வழங்க உத்தரவிட்டார்.

மேலும் புதிதாக கட்டி உள்ள மாணவிகளின் தங்கும் விடுதியை ஆய்வு செய்த பின்னர் வரும் கல்வியாண்டில் அதனை திறந்து சேர்க்கை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அப்போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் புதியதாக கட்டப்பட்ட பழங்குடியினர் மாணவர்கள் தங்கும் விடுதி விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஏலகிரி மலையில் வாழும் பழங்குடியினர் மக்களுக்கு நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் கொடுத்து வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குனரிடம் கோரிக்கை வைத்தார்.

மேலும் இந்த ஆய்வின் போது மாவட்ட பழங்குடியினர் அலுவலர் கலைச்செல்வி, ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் திருமால் மற்றும் விடுதி பாதுகாப்பாளர் ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News