காவிரி ஆற்றில் பள்ளி மாணவன் பிரேதம்
- 4 நாட்களுக்கு திருவிழா ஊர்வலம் பார்க்கச் சென்ற போது காணாமல் போனவர்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
திருவெறும்பூர்,
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவண்ணன் - ரேவதி தம்பதியின் இரண்டாவது மகன் சரவணன் (வயது11). இவர் திருச்சியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் கடந்த 4-ந் தேதி காலை சர்க்கார்பாளையம் பகுதியில் உள்ள கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் வந்தது. அதனை பார்ப்பதற்காக சரவணன் வீட்டில் இருந்து சென்றார். வெகு நேரம் ஆகியும் சரவணன் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடினர். எங்கும் எந்த தகவலும் கிடைக்காததால் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான சரவணனை தேடிவந்தனர்.இந்நிலையில் இன்று காலை கீழமுல்லக்குடி காவிரி ஆற்றில் ஒரு சிறுவனின் உடல் கிடப்பதாக அதே பகுதியை சேர்ந்த ஒருவர் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர். பின்னர் சரவணனின் பெற்றோரை அழைத்து அடையாளம் காட்ட சொன்னார்கள். உடலை பார்த்த அவர்கள் இறந்து கிடப்பது எங்கள் மகன் சரவணன் தான் என்று கதறினர்.பின்னர் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவிழா பார்க்க சென்ற ஆறாம் வகுப்பு சிறுவன் நான்கு நாட்களுக்கு பிறகு பிணமாக கிடைத்தது அப்பகுதியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.