உள்ளூர் செய்திகள் (District)

திருச்சி மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி விளையாட்டு விழா

Published On 2022-09-20 09:41 GMT   |   Update On 2022-09-20 09:41 GMT
  • திருச்சி மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி விளையாட்டு விழா நடந்தது
  • மத்திய மண்டல ஐ.ஜி. கலந்துகொண்டார்

திருச்சி:

சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின் அங்கமான திருச்சி மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான க்ரிடோத்சவம் என்ற தலைப்பில் விளையாட்டு விழா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான பரிசளிப்பு மற்றும் நிறைவு விழாவில், மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் முயற்சி ஒன்றை வைத்து முன்னேறினால் முன்னுதாரணமாகலாம் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து விளையாட்டு விழாவில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 700-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வழங்கினார். போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பதக்கத்தை கிரிம்சன் குழு பெற்றது. சிறந்த மாணவர் அணிவகுப்பிற்கான பதக்கத்தை டபோடில் குழு பெற்றது.

மேலும் மாணவர்களின் பிரம்மாண்டாமான அணிவகுப்பு, யோகா, சிலம்பம், வில்வித்தை, மனித பிரமிடு, ஜிம்னாஸ்டிக் மற்றும் டேக்வாண்டோ என பல்வேறு கலைகளை மாணவர்கள் சிறப்பு விருந்தினர் முன் செய்து காட்டி விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தினர்.

முன்னதாக திருச்சி பட்டாலியன் கமாண்டென்ட் ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார். மாணவர்களின் அணிவகுப்பினை பார்வையிட்டபின் சிறப்பு விருந்தினர் தேசியக் கொடியினையும், பள்ளியின் செயலாளர் செந்தூர் செல்வன் ஒலிம்பிக் கொடியினையும், கல்வி ஆலோசகர் சிவகாமி விஜயகுமார் பள்ளிக் கொடியினையும் ஏற்றி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. விழாவில் அம்பு ராக்கெட், வண்ண உருளைப்பந்து, கம்பாட்டம் என பல்வேறு வகையான குழு பயிற்சிகளை மாணவர்கள் செய்து அசத்தினர். விழாவில் பள்ளியின் தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் செந்தூர் செல்வன், கல்வி ஆலோசகர் சிவகாமி விஜயகுமார் மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News