சமயபுரம் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு
- திருச்சியில் போக்குவரத்தில் மாற்றம்
- மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அறிவிப்பு
திருச்சி,
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டமானது வரும் 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதேபோல திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் 14-ந்தேதி, வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. சித்திரைத் தேர்த் திருவிழாவிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த அரசு துறை அலுவலர்களுடனான, ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் போக்குவரத்து மாற்றம் குறித்து கூறும்போது, சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கனரக சரக்கு வாகனங்கள் கீழ்காணும் வகையில் மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 18-ந்தேதி மதுரை மார்க்கத்திலிருந்து சென்னை செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் வளநாடு கைகாட்டியில் இருந்து மணப்பாறை ஆண்டவர் கோவில் சந்திப்பு, தோகைமலை, குளித்தலை, முசிறி, துறையூர் மற்றும் பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து சென்னை செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மணப்பாறை ஆண்டவர் கோவில் சந்திப்பு, தோகைமலை, குளித்தலை, முசிறி, துறையூர் மற்றும் பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.துறையூரிலிருந்து திருச்சி வரும் கனரக சரக்கு வாகனங்கள் முசிறி ரவுண்டானா, முசிறி பெரியார் பாலம், குளித்தலை, பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், குடமுருட்டி பாலம் வழியாக திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும்.முசிறி மற்றும் சேலத்திலிருந்து திருச்சி வரும் கனரக சரக்கு வாகனங்கள் முசிறி பெரியார் பாலம், குளித்தலை, பெட்டவா ய்த்தலை, ஜீயபுரம், குடமுருட்டிபாலம், வழியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும்.சென்னை மார்க்கத்திலிருந்து திருச்சி வரும் கனரக சரக்கு வாகனங்கள் சிறுகனூர், தச்சங்குறிச்சி, பூவாளுர், வழியாக சிதம்பரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை வந்து பனமங்கலம் சந்திப்பு (என்.எச்.-38) சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை வந்தடைந்து திருச்சி செல்ல வேண்டும்.சிதம்பரம், அரியலூர் மார்க்கத்திலிருந்து (என்.எச்.-81) வரும் கனரக சரக்கு வாகனங்கள் பெருவளநல்லூரிலிருந்து குமுளுர், தச்சங்குறிச்சி வழியாக சிறுகனூர் சென்று பெரம்பலூர் மார்க்கமாக சென்னை செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.