உள்ளூர் செய்திகள்

அரிஸ்டோ மேம்பாலத்தில் இணைப்பு பாலம் திறப்பு

Published On 2023-05-29 08:14 GMT   |   Update On 2023-05-29 08:14 GMT
  • அரிஸ்டோ மேம்பாலத்தில் சென்னை அணுகுச்சாலை இணைப்பு பாலத்திதை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.
  • 8 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவு பெற்ற பணிகள்

திருச்சி,

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில், திருச்சி ரெயில்வே ஜங்ஷன் மேம்பாலத்தின் புதிய கட்டுமான பணிகள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதன்படி திருச்சி மாநகரில் அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம் அமைக்கும் பணி 2 கட்டங்களாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பேருந்து நிலையப்பகுதி, ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டது. இதில் ராணுவத்திற்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதத்தால் பாலத்தின் 20 விழுக்காடு பணிகள் தடைபட்டுபோனது. இந்நிலையில் சென்னை-மதுரை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டதால் இந்த பகுதியில் அணுகு சாலை அமைக்க முடியாமல் இருந்தது. இதையடுத்து இந்த தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் டெல்லியில் மத்திய மந்திரிகளை பலமுறை நேரில் சந்தித்து 0.66 ஏக்கர் ராணுவ நிலத்தை பெற்றுக்கொடுத்தார். அதன்பின்னர் பணிகள் வேகமடைந்தன. பல்வேறு கட்ட தொடர் நடவடிக்கைக்குப்பின் இராணுவத்துறைக்கு சொந்தமான நிலத்தின் மதிப்பான ரூ.8.45 கோடிக்கு சம மதிப்பிலான உட்கட்டமைப்பை அமைத்து தருகிறோம் என்பதன் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செயலாக்கம் ஏற்பட்டதனை தொடர்ந்து அணுகு சாலை அமைக்க கடந்த 05.05.2022 அன்று ராணுவ நிலம் கிடைக்கப்பெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவால் 14.05.2022 அன்று ரூ.3.53 கோடி மதிப்பிட்டில் அரிஸ்டோ மேம்பாலத்தின் சென்னை செல்லும் பகுதிக்கு அணுகு சாலை, ராணுவ நிலத்தை ஒட்டிய சுற்றுச்சுவர், சேவைச்சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பு போன்ற பணிகள் துவக்கி வைக்கப்பட்டு தற்போது அதற்கான பணிகள் முடிவுற்றுள்ளது. பாலத்தில் மின்விளக்கு பொருத்தும் பணிகள் மற்றும் பாலத்தில் சாலை பாதுகாப்பு பணிகள் போன்றவையும் முடிவுற்ற நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் இருசக்கர வாகனங்களில் பேரணியாக பாலத்தை கடந்து சென்றனர். நிகழ்ச்சியில் எம்.பி. திருநாவுக்கரசர், மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ., மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா, ஆணையர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் கிருஷ்ணசாமி, செல்வி,மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன், அவைத்தலைவர் அம்பிகாபதி,, பகுதி செயலாளர் மோகன்தாஸ்,கவுன்சிலர்கள் முத்து செல்வம், எல்.ரெக்ஸ், கலைச்செல்வி, கவிதா செல்வம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், வக்கீல் சரவணன், பொருளாளர் இளையராஜா, முத்துக்கிருஷ்ணன், பிரியங்கா பட்டேல், உறந்தை செல்வம், எழிலரசன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் திருநாவுக்கரசர் எம்.பி. கூறும்போது, இந்த பாலத்தை கட்டி முடிப்பதற்கு பெரிதும் உதவிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இனிமேல் தொங்குபாலம் என்ற பெயர் மறையும் என்றார்.

Tags:    

Similar News