உள்ளூர் செய்திகள்

களக்காடு மலை அடிவாரத்தில் உள்ள வன பேச்சி அம்மன் கோவில் கொடை விழா

Published On 2022-08-24 09:56 GMT   |   Update On 2022-08-24 09:56 GMT
  • களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தலையணை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனபேச்சியம்மன் கோவில் உள்ளது.
  • இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் கொடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

களக்காடு:

களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தலையணை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனபேச்சியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்றதாகும்.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் கொடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கொடை விழா கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி களக்காடு நாடார் புதுத்தெரு முப்பிடாதி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

அதனைதொடர்ந்து சிவபுரம் செல்வவிநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. சிறப்பு வழிபாட்டிற்கு பின்னர் வனபேச்சியம்மன், சாஸ்தா, சங்கிலி பூதத்தார், சுடலைமாடசுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து விஷேச அலங்கார தீபாராதனைகள் இடம்பெற்றது.

வனபேச்சியம்மன், சங்கிலி பூதத்தார் மற்றும் பரிவார சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் ஜொலித்தனர். அம்மனுக்கு பொங்கலிட்டு பக்தர்கள் வழிபட்டனர். நள்ளிரவில் அம்மனுக்கு ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டது.

அதன் பின் படைப்பு தீபாராதனை நடந்தது. கொம்பு தப்பு, மேளம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடந்தன. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் களக்காடு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News