மருதமலை கோவிலுக்கு நாளை முதல் ஒரு மாதம் வாகனங்கள் செல்ல தடை
- பணிகள் காரணமாக மலைக்கோவில் பகுதியில் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாமல் நெரிசல் ஏற்படுகிறது.
- கோவில் பஸ் அல்லது படிக்கட்டை பயன்படுத்த வேண்டுகோள்
வடவள்ளி,
கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் ஏழாம்படை வீடு என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலுக்கு விசேஷ நாட்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அதிக பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வார்கள். மேலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் மருதமலைக்கு வந்து தரிசித்து விட்டு செல்கிறார்கள். இதனால் தினந்தோறும் மருதமலையில் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
தற்போது மருதமலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மின் தூக்கி அறை, சேவார்த்திகள் காத்திருப்பு அறை, கட்டணச்சீட்டு வழங்குமிடம் அகியவற்றுடன் கூடிய மின் தூக்கி (லிப்ட்) வசதி ஏற்படுத்தும் பணி, மலைச்சாலையில் உள்ள தார்சாலைகள் சீரமைத்தல் பணி, புதிதாக யாகசாலை மண்டபம் கட்டும் பணி, கோவிலில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் புதிதாக ஆண்கள், பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டும் பணி மற்றும் கோவில் தங்க ரதம் உலா வரும் பாதையில் கருங்கல் தளம் அமைக்கும் பணி ஆகியவை நடந்து வருகின்றன.
இந்த பணிகள் காரணமாக மலைக்கோவில் பகுதியில் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாமல் நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் நாளை (5-ந் தேதி) முதல் ஒரு மாதம் மருதமலை கோவிலுக்கு இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் பஸ்சையும், படி வழியையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.