உள்ளூர் செய்திகள்
அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
- கார்த்திகை மாத பிறப்பையொட்டி பக்தியுடன் கோவில்களுக்கு வந்தனர்
- 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம்
வேலூர், நவ.17-
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு இன்று அய்யப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத முதல் நாளில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். இன்று கார்த்திகை மாதம் பிறந்ததால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் அய்யப்ப பக்தர்கள் இன்று அதிகாலை குளித்து, கருப்பு வேட்டி சட்டை துண்டு அணிந்து பயபக்தியுடன் அய்யப்பன் கோவில்களுக்கு வந்தனர்.
பின்னர் குருசாமி தலைமையில் நீண்ட வரிசையில் நின்று துளசி மாலை அணிந்து கொண்டனர்.
வேலூர் காட்பாடி சாலை விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அய்யப்பன் சன்னதியில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யப்ப மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.