வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு
- பஸ்சில் இருக்கைகள் கிடைக்காததால் அவதி
- படிக்கட்டுகள் மற்றும் இடைப்பட்ட இடங்களில் அமர்ந்து பயணம் செய்தனர்
வேலூர்:
தமிழகத்தில் பள்ளிகளில் 5 நாட்கள், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனால், வெளியூர்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்கு செல்ல மூட்டை முடிச்சுகளுடன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்தனர்.
பின்னர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு திரும்பினர். இதனால், வேலூர் புதிய பஸ் நிலையம் முழுவதும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. குறிப்பாக, சென்னை, சேலம், பெங்களூர் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு இடம்பிடித்தனர்.
பஸ்சில் இடம் கிடைக்காததால் இரவு முழுவதும் பலர் புதிய பஸ் நிலையத்திலேயே காத்திருந்தனர். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், வேலூர் புதிய பஸ் நிலைய பகுதி நேற்று இரவு பரபரப்பாக காணப்பட்டது. அதேபோல் இன்று காலையில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
சென்னை பெங்களூர் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலர் பஸ்சில் இருக்கைகள் கிடைக்காததால், படிக்கட்டுகள் மற்றும் இடைப்பட்ட இடங்களில் அமர்ந்து பயணம் செய்தனர்.