உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி
- விருதுநகரில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- இந்த பேரணியை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
விருதுநகர்
விருதுநகர் அ.ச.ப.சி.சி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-
பூமியில் உள்ள புல், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள் என அனைத்து உயிரி னங்களுக்கும் தண்ணீர் அவசியம். தண்ணீர் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப் படுகிறது.
உலகில் 3-ல் 2 பங்கு நீராலானது. இதில் பெரும் பங்கு கடலாகவும், பனிக்கட்டி களாகவும் உள்ளது. நாம் குடிக்கக்கூடிய நன்னீரின் அளவு ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. எனவே தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிக்கனமாக உபயோகிக்க வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். குளங்கள், ஏரிகள், கண்மாய், குட்டைகளை உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாப்பதன் மூலம் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும்.
நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதால், நீர்நிலைகள் மாசடைகின்றன. திடக்கழிவு மேலாண்மையில் அரசு செய்துவரும் நடவடிக்கை களோடு, பொதுமக்களின் பங்களிப்பும் மிக அவசியம். பல உலக நாடுகளில் உள்ள மக்கள் தண்ணீருக்காக ஒரு நாளில் 2 முதல் 3 மணி நேரம் வரை கணிசமான நேரத்தை செலவிடுகிறார்கள். எனவே பொதுமக்களும், எதிர்கால சந்ததிகளான மாணவர்களும் நீர் ஆதாரங்களை பெருக்குவதிலும், சிக்கன நடவடிக்கையில் அரசு எடுக்கும் நீர் பாதுகாப்பு சார்ந்த எந்த ஒரு நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும், நீர்நிலைகளை பாதுகாத்தும், தண்ணீரை மிக சிக்கன மாகவும் செலவழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைதொடர்ந்து உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகளில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.